மதுரை: ஆதீனம் மடம் சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமில் பங்கேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: இரண்டு நாட்கள் நடக்கும் முகாமில் 10 ஆயிரம் பேர் பயன்பெறுவர். இதற்காக ரூ.5 லட்சம் செலவிடுகிறோம். 15 நாட்களுக்கு ஒரு முறை, சகல வசதிகள் கொண்ட மருத்துவ முகாம் நடக்கும். பரிசோதனை, மருந்து, கண் அறுவை சிகிச்சை இலவசம். ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அதில் இடம் பெறும். சேலம் கமலா ஆஸ்பத்திரி டாக்டர் ராஜகோபால் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளிக்கின்றனர்.
பக்தர்களான அமெரிக்க டாக்டர்கள் இருவர், 47 “டயாலிசிஸ்'(ரத்த சுத்திகரிப்பு) இயந்திரங்கள் வழங்கியுள்ளனர். மேலக்கோபுர வாசல் ஆதீன இடத்தில், இலவச “டயாலிசிஸ்’ மையம் அமைக்க முடிவு செய்தோம். அங்கு கடை வைத்துள்ள நபர், இடத்தை தர மறுக்கிறார். அவர் மீது போலீசில் புகார் செய்வேன். மற்றொரு ஆதீன இடத்தில், 300 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரி கட்டப்படும். ஆதீனத்திற்கு சொந்தமான 140 இடங்கள், ஆக்கிரமிப்பில் உள்ளன. அவர்களால், மதுரையில் மேற்கொள்ளவிருக்கும் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பட்டியல் தயாரித்து வருகிறோம். முறைப்படி ஆதீன இடத்தை பயன்படுத்துவோருக்கு பாதிப்பு வராது. மதுரை ஆதீன சொத்துகள் உள்ள கிராமங்கள், மாதிரி கிராமங்களாக மாற்றப்படும்.நான் கறைபடவில்லை; பிறரால் கறைபடுத்தப்பட்டேன். கோர்ட் தீர்ப்பிற்கு பிறகும் சிலர் ஆர்பாட்டம் செய்கின்றனர். அவர்கள் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்படும். நான் யாருக்கும் பணம் கொடுத்து சரிகட்டவில்லை.
மருத்துவ முகாமிற்கும், மடத்தின் புனிதத்திற்கும் தொடர்பில்லை. மக்கள் நலனுக்கு பாடுபடுவதில், மடங்களுக்கு பங்குண்டு. மீனாட்சி அம்மன் கோயிலில் என்னை அனுமதிக்க மறுப்பவர்களுக்கு, சட்டப்படி நோட்டீஸ் அனுப்ப உள்ளேன் என்றார். மதுரை ஆதீனம் உடனிருந்தார்.